‘ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை’ …. தைரியமிருந்தால் தனித்து போட்டியிட தயாரா..? திமுகவுக்கு பாஜக சவால்!!
Author: kavin kumar31 December 2022, 8:50 pm
திராணி இருந்தால் 2024 தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடியுமா..? என்று திமுகவுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பாஜக நினைக்கிறது. மற்றபடி, தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பாஜக வளராமல் பாஜகவினரே பார்த்துக் கொள்வார்கள்.
ஒன்றிய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர,தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க.ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்பது போல், இதுவரை வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத, திராணி இல்லாத, தெம்பில்லாத ஒரு கட்சி தி மு க. 2014ல் கூட்டணி வைத்து போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத கட்சி தி மு க. சவால் விடுகிறோம். தி மு வுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும்” எனக் கூறினார்.