‘சாதி ரீதியாக அவமானப்படுத்தீட்டாரு’… திமுக எம்பி டிஆர் பாலு மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார்..!!
Author: Babu Lakshmanan8 February 2024, 9:33 am
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறித்து இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய அமைச்சராக இருப்பதற்கே தகுதியில்லாதவர் என்று திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. பட்டியலின அமைச்சர் ஒருவரை இப்படி பேசலாமா..? என்று அவருக்கு எதிராக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
டிஆர் பாலுவின் இந்தப் பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், அமைச்சர் எல்.முருகன் குறித்து இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலுவின் பேச்சை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சாதிய உள்நோக்கத்தோடும், மிக மோசமாக சாதிய வன்மத்தோடும், சாதிய அதிகார அடக்குமுறை ஆணவத்தோடும், மத்திய இணை அமைச்சர் எல் முருகனை இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு டிஆர் பாலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.