மோசமான நிலையில் தமிழகம்…. மதுபோதையில் மகளிர் கல்லூரியில் புகுந்து இளைஞர்கள் ரகளை செய்த சம்பவம் குறித்து பாஜக வேதனை!!
Author: Babu Lakshmanan5 November 2022, 4:49 pm
மதுரையில் மதுபோதையில் இளைஞர்கள் மகளிர் கல்லூரியில் புகுந்து ரகளை செய்த சம்பவம் தமிழகம் மோசமான நிலையில் இருப்பதை உணர்த்துவதாக பாஜக வேதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் லுறியிருப்பதாவது :- மதுரை அரசு மகளிர் கல்லூரி வாசலில் சென்று கொண்டிருந்த அமரர் ஊர்தி முன்பாக மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒரு சாதாரண சம்பவமாக புறந்தள்ள முடியாது, அவர்களின் ஆபாச நடனம் மற்றும் அருவருக்கத்தக்க சொற்களை பொறுக்க முடியாமல் தவித்ததையடுத்து தட்டி கேட்ட ஒருவரை கண்மூடித்தனமாக அந்த குடிகார வன்முறை கும்பல் தாக்கியது தமிழகம் மிக மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஒழுக்கம், பண்பு, மாண்பு, மரியாதை, நாகரீகம், கட்டுப்பாடு என எல்லாவற்றையும் உதறித்தள்ளும் கொடிய அரக்கனாக, உந்து சக்தியாக டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் விளங்கி கொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. அரசே மதுவை விற்கும் அவளை நிலையினால் தான் இக்கொடூர சம்பவங்கள் நிகழ்கின்றன எனபதை யாராலும் மறுக்க முடியாது. இதே நிலை நீடித்தால், பொது மக்கள் அச்சமின்றி தெருவில் நடமாட முடியாத சூழ்நிலை விரைவில் உருவாகி விடுமோ என அஞ்சத்தோன்றுகிறது.
சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற மனநிலை மக்களிடம் பெருகிவருவது சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதோடு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போகும் நிலை உருவாகும். சமூக கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம், நம்மை தட்டி கேட்க யாருமில்லை என்ற அகம்பாவ எண்ணம் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தினால் தான் பெருகி வருகிறது. அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக இரும்புக்கரம் கொண்டு கண்டித்து, தண்டிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக காவல்துறைக்கு உள்ளது.
அதே போல், இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களுக்கும் இந்த கடமை உள்ளது. ஆனால்,கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில்,ஆசிரியர் பணியில் சேர்வதற்கு கூட பல லட்சம் லஞ்சம் கொடுத்து, வாங்கி கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில் தூய்மையான இளைய சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்பது கேள்வி குறியே!
இது போன்ற சட்ட விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு, அரசியல்வாதிகள் தான் பெரும்பாலும் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள். விரைந்து பிரபலமடைவதற்கும், பொருளீட்டுவதற்கும் குறுக்கு வழியில் பயணம் செய்ய துடித்து கொண்டிருக்கிறார்கள் பலர். அந்த நபர்களை பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் அடையாளம் கண்டு ஒதுக்குவதன் மூலம் தான் கட்டுபாடுள்ள, ஒழுக்கமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும், என தெரிவித்துள்ளார்.
0
0