உதயநிதி ராஜினாமா செய்வாரா..? இனி சனாதன விவகாரத்தில் திமுக கப்சிப் ஆகுமா..? நாராயணன் திருப்பதி சரமாரி கேள்வி…!!
Author: Babu Lakshmanan6 November 2023, 1:00 pm
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா..? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார். மேலும், நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறை தங்களுடைய கடமையை புறக்கணித்தது போன்றது என்றும், எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது, எனக் கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதி மன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்ற தெரிவித்துள்ளது. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது என்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதி மன்றம்.
இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை என்றும் இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணருவதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை ஏற்படுத்துவதை விடுத்து, உடல் நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும் மது மற்றும் போதை பொருட்களை அழிப்பது, ஊழலை ஒழிப்பது, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூக சீர்கேடுகளை ஒழிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவது சிறந்தது என்று அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதித்து நடந்து கொள்வாரா? தி மு க அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதி மன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? இனி சனாதன தர்மம் அதாவது ஹிந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?, என தெரிவித்துள்ளார்.