ஆயுதப்பூஜைக்கு சாமி படங்களை பயன்படுத்தக் கூடாதா..? திமுக இந்து விரோத அரசு என்பதற்கு இதுவே சாட்சி ; பாஜக கொந்தளிப்பு…!!!
Author: Babu Lakshmanan19 October 2023, 9:07 am
ஆயுதப்பூஜைக்கு சாமி படங்களை பயன்படுத்தக் கூடாதா..? திமுக இந்து விரோத அரசு என்பதற்கு இதுவே சாட்சி ; பாஜக கொந்தளிப்பு…!!!
ஆயுதப் பூஜையன்று அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் சாமி படங்களை பயன்படுத்தி சாமி கும்பிடக் கூடாது என்று திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆயுதப் பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளில், எந்த ஒரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம் மற்றும் சிலை வடிவில் பயன்படுத்தக் கூடாது என திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக, அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம் அல்லது சிலைகள் இருப்பின், அதனை அகற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் ஹிந்துக் கடவுள்களின் படங்கள் தான் இடம் பெறுமேயன்றி, வேறு எந்த மதத்தை சார்ந்த புகைப்படம் பயன்படுத்தப்படும்? தமிழகத்தின் ஒவ்வொரு கட்டிடமும் பூமி பூஜை செய்தே கட்டப்பட்டவை என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்து விடக்கூடாது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் நோயாளிகளும்,மருத்துவர்களும் சாமியை கும்பிட்டு விட்டே நலம்பெறுவார்கள் என நம்பிக்கையோடு சிகிச்சை பெறுகின்றனர் அல்லது அளிக்கின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். சாமி படம் இருப்பின் எதிர்கால பிரச்சினைகள் என்ன நேரிடும் என அரசு விளக்க வேண்டும்.
இன்று படங்களை, சிலைகளை அகற்ற சொல்லும் அரசு, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட தைரியம் உள்ளதா? சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓட்டுக்காக இது போன்ற மலிவான செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களின், நோயாளிகளின், பொது மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கிருஸ்துவ மத பிரச்சாரகர்கள் அனைத்து வார்டுகளிலும் சென்று மத பிரச்சாரம் மற்றும் மத மாற்றத்தில் ஈடுபடுவதை என்றேனும் இந்த ஹிந்து விரோத அரசு எதிர்த்துள்ளதா? என்பதை விளக்க வேண்டும்.
அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வதே மத சார்பற்ற அரசு என்பதற்கு பொருள்; மாறாக, ஒரு மதத்தை அழிக்க நினைப்பது, வசைபாடுவது என்பது மதவாத அரசாகவே கருதப்படும். இந்த சுற்றறிக்கையினை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையினர் திரும்பப் பெற வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ, சிலையோ வைக்க கூடாது என கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியதாக வலம் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.