திருமா வயிற்றில் புளியை கரைத்த பாஜக : திமுக அரசுக்கு திடீர் எதிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2022, 8:11 pm
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட ‘எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்புகள் அனைத்துமே உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றே தெரிவித்தன.
திருமா போட்ட கணக்கு!!
இதை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்க மறுத்ததுடன், “நான் கேள்விப்பட்ட வரை உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்கும். அதை நம்புகிறேன்” என்று உறுதிபடக் கூறினார்.
ஆனால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டபோது ‘எக்சிட் போல்’ முடிவுகள் போலவே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 276 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
பல்டி அடித்த திருமாவளவன்
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “உத்தர பிரதேசத்தில் பாஜக ஜெயிக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் ” என்று ‘யூ டேர்ன்’ போட்டார்.
இதேபோல் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது.
குறிப்பாக 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி
இதனால் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ்,தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளும் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்த நிலையில்தான் முன்பு எப்போதையும் விட பாஜகவை திருமாவளவன் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அடுத்த மாதம் முதல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழகத்தில் கிராமங்கள்தோறும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலத்திட்டகளை மாநில பாஜகவினர் தீவிரமாக எடுத்துச்சென்று பிரசாரம் செய்யவேண்டும், தாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும் மாநில தலைமைக்கு பிறப்பித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருப்பதுதான்.
பாஜகவின் புதிய கணக்கு
குறிப்பாக பட்டியலின மக்களுக்கு விவசாயம், கல்வி, சுகாதாரம், எரிசக்தி, சமூக நலத்துறைகளில் நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை பெண்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு
308 வார்டுகளில் வெற்றி பெற்றிருப்பதால் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு உற்சாகத்துடன் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.
பதறிய திருமாவளவன்
இந்த தகவல்தான் திருமாவளவனின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டுள்ளது. தன் மனதில் இருந்த அச்சத்தை அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது வெளிப்படுத்தியும் விட்டார்.
“இந்திய அளவில் பாஜக அரசியல் ஆதாயத்துக்காக சாதிய ரீதியில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாதி உணர்வுகளைத் திட்டமிட்டே பரப்புகிறார்கள். சாதியைப் பின்னுக்குத் தள்ளி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பது தமிழகம் மட்டுமே. அதனால்தான் அவர்களால் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அவர்கள் தற்போது தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளனர்.
பாஜகவினர் தமிழகத்தை சூறையாடப் பார்க்கிறார்கள். சாதிய, மதவாத அரசியலை கிராமந்தோறும் கொண்டு சேர்க்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. எனவே, தமிழகத்தை காப்பாற்றும் குழலில் நாம் இருக்கிறோம். சமூக நீதி அரசியலை நாம் முன்னெடுக்கவேண்டும்” என்று பதறியுள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டத்த கைவிடக்கூடாது
இந்த அச்சம் காரணமாக திமுக அரசுக்கு இன்னொரு அழுத்தத்தையும் திருமாவளவன் கொடுத்திருக்கிறார். “மூவலூர் மூதாட்டி பெயரில் வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கூடாது. அத் திட்டம் தொடரவேண்டும். மேலும் உயர்கல்வி நிதி உதவியையும் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
தற்போது தமிழக அரசு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படிப்பை முடித்துவிட்டு இளநிலைபட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்த புதிய திட்டத்தையும் தொடரவேண்டும் என்பதும் அவருடைய வலியுறுத்தலாக இருக்கிறது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ல் அறிமுகம் செய்து வைத்த மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டமான தாலிக்கு தங்கத்தை திமுக அரசு கைவிடக் கூடாது என்று கோரிக்கை வைப்பது ஏற்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் திமுக கூட்டணி கட்சியாக இருக்கும் விசிகவின் தலைவர் திருமாவளவனும் இந்த வேண்டுகோளை வைத்திருப்பது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
திருமண உதவித்தொகை 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டதாக இருந்தாலும் கூட தங்கத்தின் மதிப்பு ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டேதான் போகும். மேலும் இந்த சலுகையை படித்த அனைத்து வகுப்பு ஏழைப் பெண்களும் கடந்த 10 ஆண்டுகளாக பெற்று வந்தனர். 2016 தேர்தலில் அதிமுக தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றதையடுத்து 4 கிராம் தங்கம் என்பது ஒரு பவுன் ஆக அதிகரிக்கப்பட்டது.
தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி
அதனால் நலிவடைந்த குடும்பத்தில் படித்த பெண்களின் திருமணத்துக்கு
60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவி கிடைத்து வந்தது. இது பெண்ணை திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருந்தது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் மட்டுமின்றி தனியார் பள்ளி, கல்லூரிகளில் படித்த ஏழை மாணவிகளும் இந்த பயனைப் பெற்று வந்தனர். இதன்படி ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பெண்கள் பயன்அடைந்தனர்.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதுதான். ஆனால் மூன்று மாதங்களுக்குள் இத்திட்டத்துக்கு பட்ஜெட் மூலம் திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
தற்போது இத்திட்டத்தை தமிழக அரசு மாற்றியமைத்து இருப்பதன் மூலம் ஒரு ஏழை குடும்ப பெண்ணுக்கு கிடைக்கும் உதவிதொகை இனி 60 சதவீதம் வரை குறைந்து போகலாம்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி
ஏனென்றால் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இந்த 1000 ரூபாய் உதவித்தொகையை பெற முடியாது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 3 லட்சம் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி கேள்விக்குறியாகிறது. அதை ஐந்தாண்டுகளுக்கு கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 15 லட்சம் வாக்குகளை திமுக கூட்டணி தேர்தலில் இழக்க நேரிடலாம்.
அது, எங்கே 2024 தேர்தலில் தங்களின் வாக்கு வங்கியில் கை வைத்து விடுமோ என்று பயந்துபோய்த்தான் தாலிக்கு தங்கம் திட்டத்தை எப்போதும் போல தொடரவேண்டும் என விசிக தலைவர் கூறியிருக்க வாய்ப்பும் உண்டு” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
தேர்தல் லாப, நஷ்ட கணக்குகளை போட்டுப் பார்த்து திருமாவளவன் கொடுத்திருக்கும் நெருக்கடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
0
0