அண்ணாமலை வீட்டருகே கொடிக்கம்பம் அகற்றம் ; பாஜகவினர் – போலீசாரிடையே தள்ளு முள்ளு… சென்னையில் நள்ளிரவில் பதற்றம்!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 8:36 am

சென்னை ; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டருகே கொடிக்கம்பத்தை போலீஸார் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

சென்னை – பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் அருகே பாஜகவினரின் சார்பில் சுமார் 50 அடி உயரத்திற்கு கட்சிக் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க நெடுஞசாலைத்துறையின் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு, அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிலர், கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பாஜகவினரும் அப்பகுதியில் கூடினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.

அப்போது, இருதரப்பினரிருடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயம், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தினர்.

கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர்த. இதனால், ஆத்திரமடைந்த பாஜக பாஜகவினர், ஜேசிபி கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்து, இரத்தம் பீரிட்டு வந்தது.

தொடர்ந்து, கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர், கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0