‘கட்சி-னா அண்ணாமலைக்கு மட்டும் தானா…?’ அதிமுகவுக்கு தாவிய பாஜகவின் முக்கிய நிர்வாகி குற்றச்சாட்டு..!!!
Author: Babu Lakshmanan30 March 2024, 10:40 am
‘கட்சி-னா அண்ணாமலைக்கு மட்டும் தானா…?’ அதிமுகவுக்கு தாவிய பாஜகவின் முக்கிய நிர்வாகி குற்றச்சாட்டு..!!!
தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மறுத்தால் பாஜகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவுக்கு தாவிய சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டாலும், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
தற்போது, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் அவர் ஆதரவு கேட்டு பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவதற்கு பாஜகவில் இடம் கிடைக்காத விரக்தியில் கட்சி மாறியுள்ளதாகவும், மாநில பட்டியலின தலைவரான தனக்கே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகிய மூவர் மட்டுமே கட்சி என நினைத்துக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் தனது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைய இருப்பதாக தடா பெரியசாமி கூறினார்.