அரியலூர் மாணவி விவகாரத்தில் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை : வழக்கை சிபிஐயிடம் ஒப்படையுங்கள் : எச்.ராஜா வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan22 January 2022, 4:40 pm
தஞ்சை : மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும், மதமாற்றம் செய்ய முயலும் அந்த பள்ளியை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எச். ராஜா உள்ளிட்ட மூத்த .நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசியதாவது :- தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாததால், சிபிஐ வழக்கை விசாரிக்க வேண்டும். அந்த பள்ளியை இழுத்து மூடவேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டதால் உடலை பெற்றுக் கொள்கிறோம். மணப்பாறையில் தந்தை தோண்டிய குழியில், சிறுவன் விழுந்து உயிரிழந்த போது திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர்.
மேலும் கட்சி சார்பாக நிதி வழங்கினார். ஆனால் ஏன் இந்த மாணவி உயிரிழப்புக்கு அவர்கள் வரவில்லை, என கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கருப்பு முருகானந்தம், ராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினர் கைது செய்தனர்.