சிதம்பரம் கோவிலை கைப்பற்ற நினைத்தால் மிகப்பெரிய போராட்டம் : ஹெச் ராஜா எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 7:52 pm

விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக எச்.ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஹரியானா, ஜம்முகாஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்து சமுதாயத்தை சாதியை சொல்லி பிரித்து சிறுபான்மையினரை மதத்தின் பெயரால் இணைத்து நாட்டை சிதைத்துவிட வேண்டுமென மனப்பால் குடித்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.
ஹரியானாவில் கடந்த 2019-ல் பா.ஜனதா 40 சீட்டுகள் பெரும்பான்மையாக வெற்றி பெற்று சவுத்தாலா கட்சியுடன் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிலையில் இந்த முறை அரிது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 2019-ல் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் 36 சதவீதமாக இருந்தது.

இம்முறை 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 29 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் வாக்கு சதவீதத்தில் முதல் இடத்தில் பா.ஜனதா இருக்கிறது.

370 சட்டத்தை ரத்து செய்ததை மக்கள் ஏற்கவில்லை என காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் கூறுவது உண்மைக்கு புறம்பானது. மக்கள் அமைதியை விரும்புகின்றனர். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளியே உள்ள அந்த மைதானத்தில் வருடா வருடம் கும்மியாட்டம், கோலாட்டம், கரகாட்டம் எல்லாம் நடத்துவது வழக்கம்.

அங்குள்ள பொது தீட்சிதர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென இதுபோன்று அங்கு நடந்ததை தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய தீய விரோத சக்திகள் தவறாக தெரிவித்திருக்கிறார்கள்.

பொது தீட்சிதர்கள், 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்றதாக கூறுகின்றனர். இந்த நிலம் அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு தாசில்தாரிடம் உள்ளது. 3,347 ஏக்கர் நிலமும் சிறப்பு தாசில்தாரிடம் உள்ள நிலையில் பொது தீட்சிதர்கள் எப்படி விற்க முடியும்.
கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய தடை எனக்கூறுகின்றனர். இது இந்து சமய அறநிலையத்துறையின் விஷமத்தனமான செயல்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இந்து விரோத தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், நடராஜர் கோவிலுக்கு எதிராக புரளியை பரப்புகின்றனர். இதனை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.

2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய பொது தீட்சிதர்களுக்கு உரிமை அளித்துள்ளது. இதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது, அவர்களுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எப்படியாவது ஏதாவது சொல்லி கோவிலை அபகரிக்க பார்க்கிறார்கள்.

அரசு, நடராஜர் கோவிலை அபகரிக்க திட்டம் தீட்டுகிறது. நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது, அபிஷேக கட்டணம் கிடையாது. உண்டியல் கிடையாது.

அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத, தரிசன கட்டணம் இல்லாத கோவில் நடராஜர் கோவில். இப்படிப்பட்ட இந்த கோவிலை அபகரிக்க நினைத்தால் இந்துக்கள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியது வரும் என தெரிவித்தார்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 591

    0

    0