அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உண்டு… ஏன் தெரியுமா..? ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சொன்ன விளக்கம்!!
Author: Babu Lakshmanan5 October 2022, 4:31 pm
அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கிய நிலையில், நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ஏறக்குறைய கட்சியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி விட்டார். இருப்பினும், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதேவேளையில், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைத்து அதிமுகவை இயக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
இதற்கிடையில், அதிமுகவை கைப்பற்றுவது தொடர்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் டெல்லிக்கு சென்று அங்கு பிரதர் மோடி- அமித்ஷா ஆகியோரை சந்தித்து விட்டு திரும்பியுள்ளனர். இந்த சந்திப்பு அதிமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேவேளையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் ஒருங்கிணைக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :- தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அந்த அடிப்படையில் எங்களது கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவது பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. கூட்டணியில் உள்ளோம் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து வருகிறோம். அந்த அடிப்படையில் ஓபிஎஸ் விரைவில் அவர்களை சந்திப்பார், எனக் கூறினார்.
மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஓபிஎஸ் நியாயப்படுத்துவது குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது :- நாங்கள் ஒன்றும் திமுக அரசின் செயலை ஆதரிக்கவில்லை. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையுடன் செயல்படக்கூடாது.
அப்படி நடக்கும் பட்சத்தில் அதை துணிவுடன் தைரியமாக எதிர்த்து நின்று சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்றுதான் கட்சியின் தலைவராக இருந்து ஓபிஎஸ் ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திரித்து பிரச்சாரம் செய்கின்றனர், எனக் கூறினார்.