திமுகவை மக்கள் விரைவில் வெளியேற்றுவார்கள்… ஒரு வருட ஆட்சியில் மக்கள் பெரும் வேதனை… கரு. நாகராஜன் பாய்ச்சல் !!

Author: Babu Lakshmanan
9 June 2022, 11:55 am

வேலூர் : மேகதாது விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பா.ஜ.க. தான் என்று பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் இன்று பாஜக சார்பில் வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், கே.எஸ்.நரேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு.நாகராஜன் கூறியதாவது :- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு பட்ஜெட்டில் 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. ஆனாலும் மேகத்தாதுவில் தடுப்பு அணையை கட்டமுடியவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது மத்திய அரசு. அதன் மூலம் தமிழக அரசின் இசைவு பெற்று கட்டவேண்டும் என ஆணையம் தெரிவித்ததால் தான் அணை கட்ட முடியவில்லை. இதற்கு காரணம் பாஜக அரசுதான். இது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தெரியும். அரசியல் காரணங்களுக்காக இதனை மறைத்து வருகிறார்கள்.

அம்பேத்கர் பெயரை வைத்து திருமாவளவன் அரசியல் செய்கிறார். நாங்கள் அவரது பெயரை மனதில் வைத்து சேவை செய்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார். உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப்பெரிய நாடாக திகழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் பாரத பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தற்போது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 300 லட்சம் கோடியாக உள்ளது. விரைவில் அது 500 லட்சம் கோடியாக மாறும் அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பொருளாதாரத்தில் வலிமையுள்ள நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.

திமுகவின் ஓராண்டு ஆட்சி தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நகைகடன் தள்ளுபடி, கேஸ் விலை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. விரைவில் மக்கள் திமுகவை வெளியேற்றுவார்கள்.

குழந்தைகள் மற்றும் கர்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை ஆவின் மூலமே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சருக்கு இந்து மக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மனசு வராது. மற்ற மத விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்லுவார்.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் மோடியின் உரையை எம்பி கதிர் ஆனந்த் மியுட் செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி தெரியாது என்றால் அவர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பாரா?, கேரளாவில் பாஜக வலிமையாக வளர்ந்து வருகிறது. கேரளாவில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வர வேற்கிறேன். எல்லா தலைவர்களையும் மதிக்க வேண்டும் என அவர் கூறினார்.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 920

    0

    0