ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக் கொன்ற சம்பவம் ; பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று போராட்டம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 9:06 am

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த சகோதரர்கள் பிரபாகரன் (31) – பிரபு (28). இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58). இவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30). இதில் குருசூர்யமூர்த்தி, சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி பொதுகுடிநீர் தொட்டியில் துணி துவைத்த விவகாரத்தில் பிரபாகரன் குடும்பத்தினருக்கும், திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டைக்கட்டை, இரும்புக்கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அதேவேளையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் தலைமறைவாகினர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- திமுக கவுன்சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் திரு பிரபுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பாஜக Ex-Servicemen பிரிவினர், ராணுவ பேட்ஜ் மற்றும் தொப்பி அணிந்து, நமது ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவார்கள்.

Annamalai - Updatenews360

தமிழக பாஜக Ex-Servicemen பிரிவைச் சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், நாளை போராட்டம் நடத்துவார்கள். பாஜக சார்பில் Ex-Servicemen பிரிவின் தலைவர் Lt. Col ராமன், திரு பிரபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறார். ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான திமுக கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போர் நினைவிடத்தில் நடத்தப்பட உள்ள போராட்டத்தில் இணைய, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களையும் அழைக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan's love story நயன்தாரா வீடியோ லீக்…படையெடுக்கும் ரசிகர்கள் ..!
  • Views: - 437

    0

    0