இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக ஊழல்… எவ வேலு வீட்டில் ரெய்டு… இது ரொம்ப லேட் ; அண்ணாமலை பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 5:07 pm

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊழல்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகமாக நடைபெற்று வருகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அரசு சார்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக, நேற்று நாம் 200 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை நாட்டின் அரசு அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் இந்திய நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அரசு சார்பாக ஏற்கனவே இலங்கையில் மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு 4000 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மலைப்பகுதியில் படிக்கும் குழந்தைகளின் அறிவுத்திறனை ஆற்றலை மேம்படுத்த கம்ப்யூட்டர் நாலெட்ஜ் வளர்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

தற்போது, 3 மாதங்களில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது, இந்திய அரசு பல்வேறு விதமாக உதவி செய்து தோள் கொடுத்துள்ளது. இந்த நன்றியை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வருமான வரி சோதனை இன்று நடைபெற்று வருகிறது. திமுக அமைச்சரான ஏ.வ.வேலு, அவர்களுக்கு வருமானவரி துறை சோதனை எப்போதோ வந்து இருக்க வேண்டியது. தமிழ்நாடு முதல்வர் அவருடைய மருத்துவக் கல்லூரி, அவரை சார்ந்தவர்களின் மருத்துவ கல்லூரியை திறந்து வைப்பதிலேயே குறிக்கோளாக உள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததின் அடிப்படையில், அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தான், தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.வ.வேலு, யார் அவருடைய தொழில் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், தற்போது அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் எப்படி சேர்ந்தது பணம் எங்கே இருந்து வந்தது என்ற கேள்விகள் அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. திமுக அரசியல் தங்களது பதவிகளை வைத்துக்கொண்டு வருமானத்திற்கு அதிகமாக பணங்களை பெற்று சொத்துக்களை சேர்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊழல்கள் அதிகரிக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகமாக நடைபெற்று வருகிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவருமே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அரசியல் தகுதியை வைத்து மட்டுமே இத்தகைய சொத்துக்களை சேர்ப்பது, ஊழல் செய்வது என ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பயணம் சென்றபோது, அங்கு இருக்கக்கூடிய உள்துறை மற்றும் வழித்துறை அமைச்சர்கள் இந்திய நாட்டு வழித்துறை அமைச்சர்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது, மீனவரிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். குறிப்பாக இலங்கை சிறையில் வாடி தவிக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை முன் வைக்கப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும் நிச்சயமாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை ஆவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என முதல்வர் முக ஸ்டாலின் கூறுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை பேசியது :- கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை எடுத்து மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிவித்து வாக்கு சேகரிப்போம். அதே சமயம் திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து 30 மாதங்களாக என்ன தவறு செய்தார்கள். அவர்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையில் இதுவரை எந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்த சாதனைகளை எடுத்துரைத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளை மக்களிடமிருந்து கேட்டு பெறுவோம். அதுவே எங்களது லட்சியம் ஆகும்.

தமிழ்நாட்டில் தான் கொடியேற்றினால் கைது செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கொடியேற்றினாலோ, அல்லது மற்ற அரசியல் கட்சி கொடி ஏற்றிய இடத்தில் புதிதாக கொடியேற்றினாலோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணம் பாஜகவை கண்டு திமுக அஞ்சுகிறது என்பதே முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் திமுக அரசு தொழில் முனைவோர்களுக்கு எதிராக உள்ளது.

பாஜக தேசிய அரசியல் கட்சி, இதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மக்களுக்காக சேவையாற்ற நினைக்கிறார்கள். இந்த நிலையில், அரசியலில் சில மாற்று சிந்தனைகள் தர்மசங்கடமான நிகழ்வுகள் ஏற்படுவது இயல்பு, அதுபோலவே சூர்யா சிவா பிரச்சனை அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது கடந்த 11 மாதம் அவர் கட்சியில் இருந்து வெளியே இருந்தார். பின்பு மீண்டும் பாஜக கட்சிக்காக அவர் உழைப்பார் சிறந்த பேச்சாளர்.

ஆகையால் நேற்று முதல் அவர் ஏற்கனவே தமிழ்நாடு பாஜகவில் வகித்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார். பாஜகவில் ரவுடிகள் அதிகமாக நிர்வாகிகளாக சேர்கிறார்கள் எனத் தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சில ரவுடிகள் நாங்கள் திருந்தி விட்டோம், திரும்பி வாழ விரும்புகிறோம். ஆகையால் பாஜகவில் இணைந்து நல்ல முறையில் மக்களுக்கு பணி ஆற்றுகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள், என தெரிவித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!