எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு குரூப் 4 தேர்வை பாஸ் பண்ண முடியுமா..? ; அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை சவால்..!!
Author: Babu Lakshmanan22 August 2023, 6:33 pm
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்ததில் எந்த தவறும் இல்லை என்றும், வேலையில்லாத அரசியல் கட்சிகள் வேலையில்லாத கருத்துக்களை ரஜினி குறித்து பேசுவார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நெல்லை என்ஜிஓ காலனியில் பாஜக சார்பில் மாநில அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கூட்டம் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது:- என் மண் என் மக்கள் யாத்திரை எழுச்சியாக அமைந்துள்ளது. கடை கோடியான கிராமம் வரை மத்திய அரசின் திட்டம் சேர்ந்துள்ளது. இந்த யாத்திரையின் மூலம் தெரிய வந்துள்ளது.
முதற்கட்ட பயணம் இன்றைய தினம் நெல்லை சட்டமன்ற தொகுதியோடு நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்ட பயணம் அடுத்த மூன்றாம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கிறது. அந்த பயணத்தில் 36 தொகுதிகளை உள்ளடக்கி யாத்திரை அமைந்திருக்கிறது. 5 கட்டமாக இந்த பயணம் வடிவமைக்கப்பட்டு ஜனவரி பதினொன்றாம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் பகுதி 9 கிலோமீட்டர் தூரம் திட்டமிடப்பட்டது.
அடுத்த கட்டமாக நடைபெறும் பயணத்தில் 12 கிலோமீட்டர் தூரம் என மாற்றப்பட்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு இ பாக்ஸ் லேர்னிங் திட்டத்தை நிறுத்தினார்கள். நீட்டை பற்றி போலியான கட்டமைப்பை இன்னும் ஆக்ரோசமாக திமுக பேசி வருகிறது. 2021ம் ஆண்டை விட நீட் தேர்வு இந்த ஆண்டு சிறப்பாக மாணவர்களால் எழுதப்பட்டுள்ளது.
திமுக, கட்சி கொள்கைகளை அரசு திட்டங்களிலும் திணித்து வருகிறது. நீட்டை வைத்து அரசியல் செய்து வரும் திமுக தற்போது இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது. திமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சாதாரண மக்கள் யாரும் செல்லவில்லை. ஆளுங்கட்சி மாநில அளவில் நடத்தும் போராட்டம் என்றால் மாநிலமே சம்பித்திருக்க வேண்டும். மக்கள் அந்தப் போராட்டத்தை புறக்கணித்து விட்டனர்.
ஆளுநர் பதவி தொடர்பாக பேசும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு குரூப் 4 தேர்வை எழுதி பிக்சிங் இல்லாமல் பாஸ் செய்யட்டும் பார்ப்போம். ஆளுநரிடம் அமைச்சராக அரசியலமைப்புச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். அரசியல் அமைப்பு சட்டப்படி நீட் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. அதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது.
அனைத்து மாநிலத்தையும் ஒப்பிடும்போது தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். நீட் தேர்வு தொடர்பாக திமுக செய்யும் செயல் போகாத ஊருக்கு வழி தேடும் செயல். தமிழகத்தின் அரசியல் நிலை மாறி வருகிறது. இந்த முறை தமிழகத்தின் அரசியல் நிலை என்பதே வேறு. திமுகவின் 36 மாத ஆட்சியும், பாஜகவின் 9 ஆண்டு ஆட்சியும் மக்கள் திராசு தட்டை வைத்து பார்த்து வாக்களிப்பார்கள்.
வேலையில்லாத அரசியல் கட்சிகள், வேலையில்லாத கருத்துக்களை ரஜினி குறித்து பேசுகிறார்கள். ரஜினி யோகி காலில் விழுந்தது எந்த விதத்திலும் தவறில்லை. சிஏஜி அறிக்கையில் ஊழல் இருப்பதாக சொல்லவில்லை. செலவினங்கள் அதிகரித்திருப்பதாக தான் சொல்லி இருக்கிறார்கள். அதை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது, என தெரிவித்தார்.