மாமூல் தர மறுத்த ஓட்டல் மேலாளரை தாக்கிய ரவுடி கும்பல்… இதுதான் ஊழல் திமுக அரசின் சாதனை ; அண்ணாமலை பாய்ச்சல்
Author: Babu Lakshmanan14 November 2023, 8:55 pm
சென்னையில் மாமூல் தர மறுத்த ஓட்டல் மேலாளரை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிய ரவுடி கும்பல் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை – திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் புகுந்த ரவுடி கும்பல் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓட்டல் மேலாளர் மாமூல் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கடுப்பான அந்த கும்பல், மேலாளரின் அறைக்குள் புகுந்து அவரை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளனர்.
வடமாநில ஊழியரான அவர் வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, போதைப் பொருட்கள் மற்றும் மதுவினால் பெட்ரோல் குண்டுவீச்சு, இரவு, பகலில் கொலை சம்பவங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் குண்டர் சட்டம் போடுவது தான் ஊழல் திமுக அரசின் சாதனையாகும்.
தற்போது, திருமங்கலம் பகுதியில் ஓட்டல் மேலாளரை மாமூல் கேட்டு ரவுடி கும்பல் தாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மக்களை பாதுகாப்பில்லாத வாழ்க்கை முறையில் வாழவைப்பதுதான் திமுக அரசின் எண்ணமாக இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.