ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு… திமுக அரசுதான் நிதியுதவியா..? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை
Author: Babu Lakshmanan25 October 2023, 5:47 pm
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், திடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இதனிடையே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில்,ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் உண்மையை பிரதிபலிக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திமுக திசை திருப்புவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் குற்றவாளிகள் வீதிகளில் இறங்கிவிட்டனர்.
2022ல் ஏற்கனவே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபரே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. எப்போதும் போல இந்த முறையும் முதலமைச்சர் ஸ்டாலின் திசை திருப்புவதற்கு தயாராகிக்கொண்டிருப்பார், என தெரிவித்துள்ளார்.