இதே வேலையா போச்சு… ஆர்எஸ் பாரதியை தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு சர்ச்சை பேச்சு.. அண்ணாமலை கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 12:50 pm

மதுரை உயர்நீதிமன்ற கிளை குறித்து சர்ச்சை பேச்சு பேசிய அமைச்சர் எ.வ. வேலுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது, தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்ததாகவும், மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் எ.வ. வேலுவின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள். “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் எவ வேலு அவர்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது.

தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?