திமுகவின் பேச்சை கேட்டு ஆடும் போலீஸ்… செய்தியாளர் மீது பொய் வழக்கு ; அண்ணாமலை கடும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 10:45 am

பெண் ஒருவர் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, திமுக மேற்கு மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் செந்தில் மற்றும் செய்தியாளர் மீது பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் சக செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பெண் ஒருவர் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியதை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் செந்தில் குமாரை, அறையில் அடைத்து வைத்து, திமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது, 55 வயது பெண்மணி ஒருவரை செந்தில் குமார் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட.

காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, திமுக கட்சியின் ஒரு பிரிவாக அல்ல. உடனடியாக, செந்தில் குமார் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், செந்தில் குமாரைத் தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 214

    0

    0