‘CM ஸ்டாலின் அறிவிச்சு 3 வருஷம் ஆச்சு… இது கூடவா போக்குவரத்துத் துறைக்கு தெரியல’ ; காவலர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை வாய்ஸ்!
Author: Babu Lakshmanan22 May 2024, 2:47 pm
காவலர்கள் பணிபுடியும் மாவட்டத்திற்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நாங்குநேரி நீதிமன்றம் முன்பாக காவலர் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது, நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்தக் காவலர், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது, என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல்…பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த நிலைமையா..? சும்மா விடக் கூடாது ; பாஜக வேதனை!!
அப்போது நடத்துனர் காவலரிடம், “அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுத்துதான் ஆக வேண்டும்,” எனக் கூறினார். ஆனால், அந்த காவலர் அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லையென தெரிவித்துள்ளது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும், நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவலர்கள் பணிபுடியும் மாவட்டத்திற்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “கடந்த 2021 – 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்துக்காக, காவலர் ஆறுமுகப்பாண்டி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.