பாசாங்கில்லாத மனிதர் விஜயகாந்த்.. இன்னுயிர் நீத்தாலும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் ; அண்ணாமலை இரங்கல்!!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 10:31 am

கேப்டன் விஜயகாந்தின் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கண்ணீருடன் கதறியபடி குவிந்து வருகின்றனர். எனவே, அவரது வீட்டின் முன்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.

தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 356

    0

    0