சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒருஅடி முன்வைத்துள்ளீர்கள்… 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த அண்ணாமலை!
Author: Babu Lakshmanan10 May 2024, 11:31 am
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தையும், அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கரின் வீடு, அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. சென்னை அழைத்து வரப்படும் சூழலில் போலீசார் சோதனை…!!!
இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தையும், அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்வைத்துள்ளீர்கள். தொடர்ந்து முன்னேறி உங்கள் பெற்றோரையும், ஆசிரியர்களையும், நாட்டையும் பெருமைப்படுத்த எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிலர், தேர்ச்சி பெறத் தவறியிருந்தாலும், உங்கள் அடுத்த முயற்சியிலும், வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.