பொன்முடிக்கு அடுத்து அந்த 4 அமைச்சர்கள் தான்… யார் முதலில் என்பது தான் போட்டியே…? பட்டியலிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
21 December 2023, 4:45 pm

முன்னாள் அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து மேலும் 4 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2002ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த தீர்ப்பின் மூலம் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார்.

மேலும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி பெற வேண்டும் என்றும், தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பெறாவிட்டால் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் தடை உத்தரவை பெறாவிட்டால், விசாரணை நீதிமன்றம் வாரண்ட் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பொன்முடி வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் பேசியதாவது :- இது தாமதமான தீர்ப்புதான். இருப்பினும் முக்கியமான அரசியல் சூழலில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இதனை வரவேற்கிறோம். தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் இருக்கிறது. சட்டம் மற்றும் நீதித்துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மீதே ஊழல் வழக்கு உள்ளது. இது விசித்திரமான வழக்கு.

அமைச்சர் பொன்முடிக்கு இப்போது தீர்ப்பு வந்து விட்டது. அடுத்ததாக இன்னும் 4 அமைச்சர்கள் உள்ளார். தற்போது தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இன்னொரு இலாகா இல்லாத அமைச்சர் சிறையில் இருந்து வருகிறார். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிலான, சூழல் தமிழகத்தில் தான் இருக்கிறது. அடுத்த அமைச்சர் எப்போது என்பதுதான் கேள்வி.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு மற்றும் பொன்முடி அவர்கள் மறுபடியும் ஒரு வழக்கில் இருக்கிறார். கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். இதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டதே கிடையாது. ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலம் வேறு. தற்போது, அரசியல் ஜாம்பவான்கள் இல்லாததால், கட்சிகள் வலுவிழந்துள்ளன. எனவே, ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று விட்டு, மீண்டும் வந்து தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து விடலாம் என நினைப்பது சாத்தியமாகது, எனக் கூறினார்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!