வெடிகுண்டு சம்பவம் என சொல்லக்கூட தைரியம் இல்லாத திமுக அரசு ; ஆளுநர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி ; அண்ணாமலை சாடல்..!!

Author: Babu Lakshmanan
29 November 2022, 5:33 pm

சென்னை ; கோவையில் நடந்த சம்பவத்தை குண்டுவெடிப்பு என சொல்வதற்கு கூட திமுக அரசுக்கு தைரியம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்திய அவர், கடந்த ஜுலை மாதம் பிரதமர் மோடியின் வருகையின் போது, தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்த பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது :- சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. நிகழ்ச்சி நடந்த நேரு விளையாட்டரங்கில் பிரதமர் பங்கேற்ற விழாவில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை.

பிரதமருக்கே பாதுகாப்பு வழங்காத இந்த அரசு சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும். பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய அரசு முகமை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அனைத்து கோயில்களிலும் மெட்டல் டிடெக்டர் வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் பிரஷர் குக்கரில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் இது தீவிரவாத தாக்குதல் என கர்நாடக மாநில டிஜிபி தெரிவிக்கிறார். ஆனால் தமிழகத்தில் கோவையில் நடந்த சம்பவத்தை நம் அரசு இன்னமும் கார் வெடிப்பு சம்பவம் என்றே கூறி வருகிறது. குண்டுவெடிப்பு என சொல்வதற்கு கூட தைரியம் இல்லை.

மத்திய அரசின் கனவு திட்டமான வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நடந்துள்ளது. வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை பகுப்பாய்வு செய்ய கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது கவர்னரின் கடமை. கவர்னர் வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது, எனக் கூறினார்.

  • தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!