அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் : அண்ணாமலை ஆவேசம்… கூட்டத்தில் சலசலப்பு…!

Author: Babu Lakshmanan
18 March 2023, 10:54 am

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பேசினார்.

இதைத் தொடர்ந்து, மாநில தலைவர் அண்ணாமலை பேசியது கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன், எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த துணை தலைவர் நாராயணன் திருப்பதி, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபணை தெரிவித்தனர். மேலும், அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், பேசிய கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதற்கும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!