திமுக நடத்தும் கம்பெனிகளுக்கு கருணாநிதி பெயரை வையுங்க… இது மக்கள் வரிப்பணம் ; அண்ணாமலை கடும் எதிர்ப்பு..!!!

Author: Babu Lakshmanan
18 October 2023, 5:00 pm

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயருக்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பு மற்றும் அணுகுசாலை சந்திப்புக்கு, அண்ணா நினைவு வளைவு அன்பழகன் நினைவு வளைவு என பெயர் வைக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது.

சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள், தலைவர்கள் பெயரை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க ஒரு அவசரக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது நகைப்புக்குரியது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை, பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களது பெயர் சூட்ட வேண்டும் என்றும், வளைவுகளுக்கு, அவரது தளபதி பொல்லான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ