பிரியாவுக்கு நிறைவேறாமல் போன ஆசை… அண்ணாமலையிடம் சொல்லி கண்ணீர் விட்ட பெற்றோர்… உடனே பாஜக எடுத்த முடிவு…!!
Author: Babu Lakshmanan17 நவம்பர் 2022, 4:59 மணி
தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியாவின் பெயரில் மாபெரும் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:- பிரியாவின் இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. பல அரசு மருத்துவமனைகள் இன்று இந்த நிலையில் தான் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ள நிர்வாக கோளாறுகளால் ஏற்படும் பல இறப்புகள் வெளியில் வருவதில்லை.
பிரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்ததாக பிரியாவின் பெற்றோர் தெரிவித்தார்கள். தவறான ஒரு சிகிச்சை கொடுத்து அதன் மூலமாக காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு.
அரசு என்னதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னால் கூட, சகோதரி பிரியாவின் இறப்பு ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பிரியாவின் இறப்பு துரதிஷ்டவசமானது. பிரியாவின் நினைவை பட்டி தொட்டி எங்கும் பத்திரிக்கையாளர்கள் எடுத்து சென்று வருகிறீர்கள்.
முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ராமன் விஜயன் தலைமையில் ஐந்து நாட்களில் பிரியாவின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து அவரின் பெற்றோர்களை சந்திப்பார்கள். பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் பத்து பெண்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி பெறுவதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக்கொள்ளும்.
மழைக்காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகள் நடத்திக் காட்டப் போகிறோம். அந்தப் போட்டிகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சரை அழைத்து வந்து கௌரவிக்க இருக்கிறோம். அமைச்சர் மா. சுப்பிரமணியனின் பேச்சில் உறுதி தன்மை இல்லை.
பிரியா அவர்களின் இறப்பிற்கு முன்பாக அரசு மருத்துவமனை அவர்களின் கடமையை செய்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். பிரியாவின் இறப்புக்கு பின்னர் அரசு மருத்துவர்களின் தவறு உள்ளது தெரிந்த பின், சிறு சிறு விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம் என்று இதே அமைச்சர் கூறுகிறார். முதல்வர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய கொளத்தூர் தொகுதியில் தான் அந்த மருத்துவமனை அமைந்துள்ளது.
10 லட்சம் ரூபாய் பண உதவி, வீடு, வேலை கொடுத்ததால் அனைத்தும் முடிந்து விடாது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவமனையில் நடந்த தவறை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டு ரத்தம் கொதிக்கிறது என்று கூறி இருந்தார். பிரியாவின் மரணத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு பொறுப்பேற்காமல் வாய்ப்பேச்சில் நிவாரண உதவி கொடுக்கிறோம் என்று கூறுகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும், என்று கூறினார்.
0
0