டாஸ்மாக் வருமானம் பற்றியே கவனம்… கோவை தற்கொலைப்படை தாக்குதல் பற்றி பேசாதது ஏன்..? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை கேள்வி..!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 1:15 pm

சென்னை : கோவை தற்கொலைப்படை தாக்குதல் பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி பேசாதது ஏன்..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?

சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்? கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா?

அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாஜக குரல் கொடுக்கும். பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்.

சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?