‘கட்சி பேரு வெளியே வந்திடக் கூடாது’ ; உளவுத்துறை அதிகாரியோடு திமுக எம்பி ஆ.ராசா ரகசிய பேச்சு… ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan17 January 2024, 1:46 pm
2ஜி வழக்கு தொடர்பாக உளவுத்துறை அதிகாரியோடு திமுக எம்பி ஆ.ராசா ரகசியமாக பேசிய ஆடியோ பதிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிகத்தை ஆளும் திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார். இந்த சூழலில் ஏற்கனவே திமுக பைல்ஸ் என்று திமுக ஊழல் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலன்று முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுடன் திமுக எம்பியும், திமுக பொருளாளருமான டிஆர் பாலு உரையாடும் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த உரையாடலில் 2ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், 2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா தொலைப்பேசி உரையாடலை அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் 2ஜி வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்காக எடுத்த நடவடிக்கை குறித்து ஆ.ராசா பேசுவது போல் உள்ளது.
இந்த ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை, 2ஜி வழக்கு விசாரணை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எப்படி நடைபெற்றது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும், திமுக பைல்ஸ் தொகுப்பு முடிவடையாது தொடரும் எனக் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு வருவது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.