திமுக எம்பிக்கு ரூ.50 ஆயிரம் கோடி சொத்தா..? திமுகவுக்கு சொந்தமாக இத்தனை கல்வி நிறுவனங்களா..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்…!!!
Author: Babu Lakshmanan14 April 2023, 11:47 am
கடந்த மாதம் தென்காசியில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, “தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்றும, இதனை வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றும் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும அவரது குடும்பத்தினர் என மொத்தம் 17 திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை முதற்கட்டமாக இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 12 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிடும் திமுக பிரமுகர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் கமலாலயத்தில் அகன்ற திரையில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ரபேல் வாட்ச் பில் குறித்து அவர் பேசியதாவது :- முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் அரசியலில் எனக்கு ரூ.7 முதல் 8 லட்சம் மாதத்திற்கு செலவாகிறது. என் உதவியாளர்களுக்கான ஊதியத்தை என்னுடன் படித்த நண்பர்களே கொடுக்கின்றனர்.
இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது ; ஒன்றை அதில் ஒரு வாட்ச்-ஐ நான் வைத்திருக்கிறேன். கோவை ஜிம்சன் எனும் நிறுவனத்தில் ரபேலின் 2வது வாட்ச் விற்பனை செய்யப்பட்டிருந்தது .
2021 மார்ச் மாதத்தில் சேரலாதன் எனும் கேரளாவைச் சேர்ந்த நபருடைய வாட்ச் ; அவரிடம் இருந்து இந்த வாட்சை வாங்கினேன். நான் காவல் பணியில் ரபேல் வாட்சை லஞ்சமாக வாங்கவில்லை ; மார்ச் மாதம் வாங்கியவர் மே மாதத்தில் என்னிடம் கொடுத்தார். 2021 முதல் என்னிடம் இருக்கும் ஒரே வாட்ச் இதுதான் ; ரூ.3 லட்சத்திற்கு ரபேல் வாட்சை வாங்கினேன்.
இதைத் தொடர்ந்து, திரையில் திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர்கள் எ.வ. வேலு, கேஎன் நேரு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 12 பேரின் சொத்து விபரங்களை அண்ணாமலை வெளியிட்டார். அந்த சொத்தின் மதிப்பு மட்டும் ரூ.1,343,170,000,00 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219 கோடிகளும், மற்றொரு திமுக எம்பி கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி சொத்துக்களும், எம்பி டிஆர் பாலுவுக்கு ரூ.10,841 கோடி சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ரூ.5,442 கோடிகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
திமுகவுக்கு ரூ.34,184 கோடி மதிப்பிலான கல்வி நிறுவனங்கள் இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது :- பிரதமர் சென்னை வந்த போது, என்னை சென்னைக்கு வரவேண்டாம் என்று பிரதமர் மோடி கூறினார். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கர்நாடக தேர்தல் பணியில் ஈடுபடுமாறு பிரதமர் கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன்.
ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் மொத்தமாக எதிர்த்து தான் ஆக வேண்டும் ; ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. நான் 10 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை ; ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன். ஜுன் முதல் அல்லது 2வது வாரத்தில் ஊழலுக்கு எதிராக நடைபயணம். ‘என் மண்… என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலை எதிர்த்து பாஜக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நடைபயணம், எனக் கூறினார்.