திமுகவில் ஒருவர் கூடவா இல்லை..? வழக்கம் போல துண்டுச் சீட்டைப் பார்த்து ஒப்பித்த CM ஸ்டாலின் ; அண்ணாமலை விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan25 September 2023, 8:48 am
மின்கட்டணத்தை உயர்த்தி தொழில்முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டாலர் சிட்டியாக இருந்த திருப்பூரை டல் சிட்டியாக மத்திய அரசு மாற்றி விட்டதாக பேசியிருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான மின்கட்டணச் சுமை ஏற்றிவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, டாலர் சிட்டி, டல் சிட்டி என்று வழக்கம்போல ஒப்பித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சிறையில் இருக்கும் சாராய அமைச்சர் ஆரம்பித்து வைத்த மின்கட்டண உயர்வு, தற்போது 15% முதல் 50% கட்டண உயர்வு, நிலைக்கட்டணத்துக்கு 430 சதவீதம் உயர்வு, காலை, மாலையில் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, 15 சதவீதம் கட்டண உயர்வு என, தொழில்முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்?
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், சிறுகுறு நடுத்தர தொழில்முனைவோர்கள் தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை?, எனக் குறிப்பிட்டுள்ளார்.