பல பாவங்களை செய்ததே திமுகவின் முதல் குடும்பம் தான்… ‘பாவ யாத்திரை’ என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி..!!
Author: Babu Lakshmanan29 July 2023, 5:57 pm
பாஜகவின் பாத யாத்திரையை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பாஜகவை கடுமையாகச் சாடிய அவர், அண்ணாமலையின் பாத யாத்திரையை ‘பாவ யாத்திரை’ என்றும், 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திலும், தற்போது மணிப்பூரிலும் நடந்த வன்முறையின் பாவத்தைக் கரைக்க நடத்தும் பாவ யாத்திரை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து விமர்சித்த அவர், இரண்டு மாதங்களாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூரில் அமித் ஷாவால் அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? என்றும், அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்துடன் தான் அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் நேற்று புனித பூமியான ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அது தமிழக முதல்வர் ஸ்டாலினை வெகுவாகக் கலங்கடித்துள்ளது. அவர் ஏற்கனவே அதைப் பற்றி சிணுங்கத் தொடங்கிவிட்டார். அதை பாவ யாத்திரை என்று அழைக்கிறார்.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ஊழல் நிறைந்த திமுக அரசு இன்று ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும் திமுகவின் முதல் குடும்பத்தின் செல்வத்தை பெருக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. ராமேஸ்வரம் கடலில் மூழ்கி, செய்த பாவங்களை போக்க வேண்டும் என்றால், முதலில் அதைச் செய்யவேண்டியது திமுகவின் முதல் குடும்பமாக தான் இருக்க வேண்டும்.
மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கச்சத்தீவை தாரை வார்த்ததால், கடலில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் திமுக – காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். திமுகவினர் அப்போது வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர். முக்கியமான அமைச்சகங்களும் அதற்கு உடந்தையாக இருந்தன.
2009இல், இலங்கையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டனர். அப்போது தனது தந்தையுடன் அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மும்முரமாக இருந்தவர் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்.
தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தமிழ் மக்களை தூண்டிலாகப் பயன்படுத்தி பல பாவங்களைச் சேர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமேஸ்வரத்துக்கு பாவ யாத்திரை செய்து, புனித நீராடி, சிவபெருமானிடம் மன்னிப்பு பெறவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.
0
0