ஆவின் நிர்வாகத்தை அழிக்கும் ஊழல் திமுக அரசின் தவறான கொள்கை ; அமைச்சர் மனோதங்கராஜுக்கு அண்ணாமலை பதிலடி..!!

Author: Babu Lakshmanan
21 November 2023, 2:24 pm

சென்னை : ஆவின் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மனோதங்கராஜுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தும் ஆவின் நிர்வாகத்தின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பாலில் 40% பங்குள்ள 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறி ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டிற்கு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆவின் பால் பிரத்யேக பாக்கெட்டுகளில் தான் இருக்கும். ஆனால், அறிக்கையில் பெட் கலனில் பால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலையின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை, என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலுக்காகவும், வெளி மாநில நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆதாயத்திற்காகவும், அண்ணாமலை இவ்வாறு செய்வதாக கருதுகிறோம் என்றும், தரமான ஆவின் பால் விநியோகத்தில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் வருந்தத்தக்க நிலையை மறைக்கும் விதமாக அமைச்சர் மனோதங்கராஜ் பதிலளித்திருக்கிறார். ஊழல் திமுக அரசு பால் கூட்டுறவு சங்கத்தை குறைவான விநியோகம், அதிக கட்டணம் வசூலிக்கும் பிரிவாக மாற்றியது குறித்த உண்மை நிலையைத் தான் இந்த அறிக்கை வெளிக்காட்டுகிறது. பொதுவாக பரிசோதனைக்கு கொடுக்கப்படும் பால், பெட் பாட்டில்களில்தான் வழங்கப்படும்.

நீங்களும் சரி, இதற்கு முந்தைய ஆட்சியிலும் சரி, ஆவின் கொள்முதலை குறைத்து, விலையை மட்டுமே அதிகரித்து ஆவின் நிர்வாகத்தை வீழ்ச்சியடையச் செய்து விட்டீர்கள். உங்களின் இந்த வீண் வாதம் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டில் கொழுப்பு சதவீதத்தை உயர்த்தாது, என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!