திமுக தொண்டனை விட ரொம்ப மோசம்… மகனுக்கு MP சீட்டுக்காக அடிபோடும் அப்பாவு ; அண்ணாமலை விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan13 February 2024, 2:48 pm
செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா செய்ததை வைத்து கொண்டு ஜாமின் தர கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆர்கே நகர் தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள பாஜக நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பாஜக நாடாளுமன்ற தலைமை தேர்தல் அலுவலகம் மற்றும் தென் சென்னையை தொடர்ந்து வட சென்னையிலும் தேர்தல் அலுவலகம் தற்போது திறந்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்திருக்கிறோம். சென்னையின் ஆதி குடிமக்கள் வாழக்கூடிய பகுதியாக வடசென்னை திகழ்கிறது. தற்போது வட சென்னை தொகுதியில் இருக்கக்கூடிய மூன்று எம்.பி களும் குடும்ப அரசியலை சேர்ந்தவர்கள், சாமானிய மனிதன் பணி செய்யக்கூடிய நிலை இல்லை.
ஆகவே இந்த முறை வடசென்னையை பாஜக கைப்பற்றும். அடுத்த 80 நாட்களில் கடினமாக உழைத்து வெற்றி பெற வேண்டும். பாராளுமன்றம் பாஜகவிற்கு தான்.
சபாநாயகர் அப்பாவு இன்று திமுக தொண்டர்களை விட மோசமாக உள்ளார். சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை. ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டி காட்டி உள்ளோம். சென்னை வெள்ளத்தில் திமுகவின் செயல் குறித்து ஆளுநர் பாராட்ட வேண்டுமென்றால், எப்படி பாராட்டுவார்கள்,
நேற்று ஆளுநருக்காக எழுதப்பட்ட உரையில் முதலமைச்சரையும், தமிழக அரசையும் பெருமைப்படுத்தும் விதமாகவே எழுதப்பட்டது. ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாதிராம் கோட்சேவுக்கும், அப்பாவுவுக்கும் தொடர்பு இருக்கலாம். ஆனால் ஆளுநருக்கும், கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சபாநாயகர் திமுக உறுப்பினர் போல் சட்டமன்றத்தில் நடந்து கொண்டார். சட்டசபையில் தமிழ் தாய்வாழ்த்து முழுமையாக வாசிக்க வேண்டும். முதலில் முழுமையான தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டும், பின்பு தேசிய கீதம் பாட வேண்டும். அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் தேசிய கீதம் பாட வேண்டும். இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை. குறிப்பாக அது கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை போல் இசைக்கக் கூடாது.
உயர் நீதிமன்றம் இரண்டு முறை ஊழலினால் கைது செய்யப்பட்ட அமைச்சருக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என சொல்லி இருந்தனர். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால்,செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா செய்ததை வைத்து கொண்டு ஜாமின் தர கூடாது.
சென்னையை பொறுத்தவரை பாதை யாத்திரையை மாற்று விதமாக நடத்த இருக்கிறோம். மாணவர்கள், மீனவர்கள், காவல் படை என மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம். சபாநாயகர் அப்பாவு மகனுக்கு தேர்தலில் MP சீட் கேட்பது போல நேற்று சட்டசபையில் சபாநாயகர் உரை இருந்தது என தெரிவித்தார்.