அனல் பறக்கும் திமுக – பாஜக நோட்டீஸ் வார்… 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் ; ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 4:19 pm

தன் மீது அவதூறு பரப்பியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, இந்த சொத்துப்பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறினார். மேலும், திமுகவின் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில், திமுக சார்பில் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திமுகவின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலையும் பதிலடி கொடுக்கும் விதமாக, 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி கேட்டும், திமுக எம்பி டிஆர் பாலு ரூ.100 கோடி கேட்டும் அடுத்தடுத்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று திமுக எம்பி கனிமொழியும் ரூ.1 கோடி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

திமுக பிரமுகர்கள் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், ஆருத்ரா விவகாரம் தொடர்பாக தன் மீது அவதூறான கருத்துக்களை கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையேல் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் பாரதி மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 345

    0

    0