அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுகவுக்கு கைவந்த கலை : அண்ணாமலை கடும் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
12 February 2022, 7:37 pm

சென்னை : அடுத்தவர்கள் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுகவினரின் கைவந்த கலை என்று கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், ராயனூர் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்த வேனில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைக்கு இனிப்பு வழங்கிய சிறுமிக்கு, பிரம்மாண்ட மாலை அணிவித்து அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதவாது :- 172 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் எந்தப் பிரச்சினையுமின்றி வீடு தேடி வந்தது. ஆனால், தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படவில்லை. பொங்கலுக்கு வழங்கப்பட்ட தொகுப்பில் பல்லி, கரப்பான்பூச்சி விநியோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனால் அந்த தொகுப்பு வெஜிடேரியனா இல்லை, நான் வெஜிடேரியனா என்ற சந்தேகம் எழுந்தது. பெண்கள் அடமானம் வைத்த நகைகளை திரும்ப தரவில்லை. 73% பெண்களுக்கு நகை கடன் ரத்து கிடையாது என்று கூறிவிட்டனர். உதயநிதி கரூர் வந்தபோது ஆயிரம் ரூபாய் எங்கே என்று தாய்மார்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் 4 வருடம் உள்ளது என்று பதிலளிக்கிறார்.

கான்ட்ராக்ட், கமிஷன், கரப்ஷன் என்று இருப்பவர்களுக்கு மத்தியில் நம்முடைய வேட்பாளர்கள் எவரிடமும் காசு கேட்காத வேட்பாளர்கள். எங்கள் வேட்பாளர்கள் பாரதப் பிரதமர் மோடியை போல் நேர்மையானவர்கள், அவர்களுக்கு வாக்களியுங்கள். கரூர் வந்தபோது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதைப் போல, ஒவ்வொரு அமாவாசை வரும் போதும் திமுக ஆட்சி முடிவுக்கு வருகிறது என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவர்கள் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுககாரர்களுக்கு கைவந்த கலை. மத்தியில் பாஜக கொண்டு வந்த திட்டங்களை தங்களுடைய திட்டங்கள் என்று கூறி வருகின்றனர். உதயநிதி நேரில் சென்று பார்த்ததால் தான் தோனி கிரிக்கெட்டில் ஜெயித்தார் என்று திமுககாரர்கள் கூறுகிறார்கள். திமுகவினர் எங்களுடைய வேட்பாளர்களை மிரட்ட தொடங்கிவிட்டனர்.

மத்தியில் எங்களுடைய ஆட்சிதான் உள்ளது என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனது சொந்த ஊரான கரூர் மண்ணிலிருந்து சொல்கிறேன் வட்டியும், முதலுமாக திருப்பித் தரப்படும், என்று பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 1219

    1

    0