அமைச்சர் செந்தில் பாலாஜி சேராத ஒரே கட்சி பாஜக தான்… திமுகவுக்கு அண்ணாமலை பதிலடி..!!!

Author: Babu Lakshmanan
16 September 2023, 11:12 am

இன்பநிதி ஒரு பால்வாடி பையன், அவனுக்கு எல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொண்டு திமுகவினர் திரிவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பா.ஜ.க  மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்தை 49வது நாளாக வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கினார். முன்னதாக, வேடசந்தூர் வந்த அண்ணாமலைக்கு கட்சியினர் மலர் தூவி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அண்ணாமலை அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் வழியாக ஆத்துமேடு பகுதிக்கு நடைபயணமாக வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவருடன் கட்சி நிர்வாகிகளும், மாணவ, மாணவிகளும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஆத்துமேட்டில் திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது :- மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழக அரசு செய்யக்கூடிய வேதனைகளை, துன்பங்களை உங்களிடைய பேச வேண்டும். வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக உங்களுடைய ஆதரவுடன் வரவேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைப்பதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளேன்.

தமிழகத்தை பொறுத்தவரை நீங்கள் அரசியல் மாற்றம் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். திமுக அரசு 30 மாதமாக ஆட்சி செய்தும் கூட உங்களது வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை நீங்கள் வெளிப்படையாக புரிந்து கொண்டு விட்டீர்கள். 2024 பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டிய தேர்தல் என்பதையும் கூட நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த போதும் கூட, வேடசந்தூரின் ஜீவநதியாக இருக்கும் குடகனாறு அணையை சரி செய்ய முடியவில்லை. அணையை சரி செய்து, ஆற்றை சுத்தப்படுத்தி தண்ணீர் தேக்கினால் மணல் அள்ள முடியாது என்ற காரணத்திற்காக, ஆற்றை சரி செய்யாமல் தண்ணீரை தேக்காமல் மணல் மாப்பியாவிற்கு துணை போகின்றனர்.

வேடசந்தூர் மாபியாக்களுக்கு மட்டுமே சொந்தமான ஊராக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

திருச்சி அருகே ஒரு வருவாய் ஆய்வாளரை லாரியை கொண்டு இடித்துள்ளனர். மணல் மாப்பியாக்களுக்கு பயந்து அரசு அதிகாரிகள் வெளியில் வர மாட்டார்கள். அதனால்தான் கிராம நிர்வாக அதிகாரிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வேண்டும் என்று அவர்கள் சங்கத்தினர் அறிக்கை விடுத்துள்ளனர்.

திமுகவின் வருமானத்திற்காக மட்டுமே தமிழ்நாட்டில் டாஸ்மாக் என்ற துறையே இருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். தாத்தா, அப்பா, பையன் என்ற மூன்று தலைமுறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆட்சியில் இருந்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், அதற்குள் திமுக-வினர் பால்வாடி படிக்கும் சிறுவன் போல் உள்ள அவரது மகன் இன்பநிதி ஸ்டாலினுக்கு போஸ்டர் அடித்து, பாலபிஷேகம் செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமை தொகையை கொடுப்பதாக திமுகவினர் கூறினர். ஆனால் ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 14ஆம் தேதியை அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டனர். எதற்கு போட்டீர்கள் என்று கேட்டால் 14ஆம் தேதி நிறைந்த அமாவாசை, அன்று கொடுத்தால் தான் ஓட்டு போடுவார்கள் என்கின்றனர். இவர்களுக்கெல்லாம் சனாதனம் வேண்டாம், இந்து தர்மம் வேண்டாம், ஆனால் அமாவாசை மட்டும் வேண்டும். கடவுள் வேண்டாம், கோவில் உண்டியல் மட்டும் வேண்டும்.

திமுக அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. சென்னையில் எவ்வாறு திமுகவின் ஆட்சி மோசமாக உள்ளதோ, அதேபோல் வேடசந்தூரில் எம்.எல்.ஏ காந்திராஜன் ஆட்சி மோசமாக உள்ளது. ஒருமுறை மேடையில் பேசிய போது பெண்கள் அழகாக இருந்தால்தான், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று பேசி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் இழிவு படுத்தியுள்ளார்.

அதேபோல் கரூர் எம்.பி ஜோதிமணியை யாராவது வேடசந்தூரில் பார்த்து உள்ளீர்களா? வேடசந்தூருக்கு என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் நீ பி.ஜே.பி கட்சியா?உனக்கு பி.ஜே.பி பணம் கொடுத்து கேள்வி கேட்க அனுப்பியதா என்று கேட்கிறார்? மணல் மாப்பியாக்களும், அரசு முக்கிய மந்திரிகளின் பினாமிகள் மட்டுமே வாழும் பகுதியாக திண்டுக்கல் வேடசந்தூர் உள்ளது.

தி.மு.க வக்கீல் கோர்ட்டில் பேசிய போது, அமைச்சர் செந்தில் பாலாஜி பா.ஜ.க-வில் சேர்ந்தால் தான் அமலாக்கத் துறையினர் கேஸ் போட மாட்டோம் என்று மிரட்டியதாகவும், இதுவரை செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும் தான் என்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!