நீட் குறித்து பொய்யான வாக்குறுதி… பள்ளி மாணவர்கள் உங்க மகனின் தேர்தல் கைக்கூலிகள் அல்ல ; அண்ணாமலை ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
2 November 2023, 4:15 pm

நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்களிடம் திமுகவினர் கையெழுத்து வாங்கும் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த நுழைவுத் தேர்வை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்தே, பெரும்பாலான ஓட்டுக்களை அள்ளியது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் நீட் தேர்வை திமுக ரத்து செய்யவில்லை. இதனால், எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு திமுக ஆளாகியுள்ளது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாகக் கூறியதை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

தற்போது, நீட் தேர்வில் விலக்கு பெறும் நோக்கில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்கான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அண்மையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் நீட் பற்றிய பொய் பிரசாரம் செய்வது, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொண்டு, அவரது மகனின் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும், நாளைய மருத்துவர்களான இளம் மாணவர்களின் மனதில் திமுக ஏன் தற்கொலை என்ற எண்ணத்தை விதைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, நீட்டுக்கு எதிராக திமுகவினர் கையெழுத்து வாங்கும் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த அவர், கடந்த வாரம் அழையா விருந்தாளியாக பள்ளிக்கு சென்ற திமுக எம்எல்ஏ, பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டினார். இன்று, திமுக நிர்வாகிகள் பள்ளி மாணவர்களை அழைத்த வந்து நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் மகனின் பொய்யான வாக்குறுதிக்கு, பள்ளி மாணவர்கள் ஒன்றும் தேர்தல் கைக்கூலிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!