திமுக எனும் வெங்காயத்தின் முதல் அடுக்கு… பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட திமுக அடிவருடிகள் ; அண்ணாமலை கொடுத்த பதிலடி..!!
Author: Babu Lakshmanan25 January 2024, 2:06 pm
திமுகவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் எனக் கூறி சில பத்திரிக்கையாளர்களின் வீடியோக்களை வெளியிட்டு, அவர்களை திமுக எனும் வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் உதயநிதியிடம் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் நேர்காணல் நடத்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். அதாவது, அமைச்சரிடம் அந்த செய்தியாளர் கடினமான கேள்விகளை கேட்கவில்லை என்றும், இவர்களே கேள்வி மற்றும் விடையை தயாரித்து கொடுத்து இந்த நேர்காணலை நடத்தியதாகக் கூறியிருந்தார். அதோடு, இதனை கிராமப்புறங்களில் ‘பல்லு படாமல் பார்த்துக்கோங்க’ என்று சொல்லுவார்கள் என்று அண்ணாமலை கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரையும், செய்தியாளரையும் அவமதித்துள்ளதாகவும், நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறினர்.
இதனிடையே, அண்ணாமலையை கண்டித்து செய்தியாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.
இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன். தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ.
பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறைக்கே அவமானம், எனக் கூறினார்.