பின்வாசலில் ஓடுவது CM ஸ்டாலினுக்கு புதிதல்ல… கொட்டிய கனமழை… சொட்ட சொட்ட நனைந்தபடி அண்ணாமலை ஆவேசப் பேச்சு…!!
Author: Babu Lakshmanan30 June 2023, 12:57 pm
பாட்னாவில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கி அண்ணாமலை பேச முற்பட்ட போது, மழை பெய்யத் தொடங்கியது.
மழை மேடையில் இருப்பவர்களை பாதிக்காத சூழல் ஏற்பட்ட போதும், தொண்டர்கள் மழையில் நனைவதை அறிந்து, மைக்கை கையில் எடுத்துக் கொண்டு, மழையில் நனைந்தபடி, அண்ணாமலை தனது பேச்சை தொடங்கினார்.
கொட்டும் மழையிலும் சொட்ட சொட்ட நனைந்தவாறு அவர் பேசியதாவது:- மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை திருவாசகம், கோளறு பதிகம், தேவாரத்தோடு நிறுவி மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சியமைப்பார்.
டெல்டா காரன் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷன் பெறப்படுகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது. திமுக அரசு வழங்கவில்லை. ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும், பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது. அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணம்.
பாட்னாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக ஓடிச் சென்றவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். பின்வாசல் வழியாக செல்வதும், ரயிலில் ஏறி வருவதும் அவருக்கு புதிது அல்ல. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை முதல் ஆளாகச் சென்று சந்தித்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சாதாரண மக்கள் சம்பாதிப்பதை தனது குடும்பத்தாரிடம் தருவார்கள். ஆனால் செந்தில் பாலாஜி தான் சம்பாதிப்பதை ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தருவார். இதுதான் சாதாரண மக்களுக்கும், செந்தில் பாலாஜிக்கும் உள்ள வித்தியாசம். 3வது முறையாக மோடியை ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோலத் தான், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய திமுக ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை, எனக் கூறினார்.