தமிழகம் தனிநாடா.? கனவுல கூட நினைத்து பார்க்க முடியாது… திமுகவுக்கு அந்த துணிவு இல்ல : அண்ணாமலை

Author: Babu Lakshmanan
4 January 2023, 2:21 pm

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி. எதற்காக தமிழக அரசு கொண்டு வருகிறது..? என்ற கேள்வியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது :- விருகம்பாக்கத்தில் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் பெண் காவலரிடம் தவறாக நடந்த நிலையில் 2 நாட்கள் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை. நேற்று இரவுதான் FIR பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தாமதாக FIR பதிவு செய்யுமாறு காவல்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனரா..? சென்னை காவல் ஆணையர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மனித மலம் குடிநீரில் கலக்கப்பட்டுள்ளது. பட்டியலின் மக்களை கோயிலில் அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள் நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் கிராமம் சாட்சியாக உள்ளது. முதலமைச்சர் அந்த ஊருக்கு மூத்த அமைச்சர்களை அங்கு அனுப்பி வைக்கவில்லை.

ஆர்கே நகர் திமுக ச.ம உறுப்பினர் எபினேசர் மாநகராட்சி பணியாளரை நிர்ப்பந்தித்து வெறும் கைகளால் கழிவு நீரை அகற்ற வைத்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் , வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் எபினேசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எபினேசரை கைது செய்ய வேண்டும் , திமுக சாதி ஆதிக்கம் உள்ள கட்சியாக உள்ளது.

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நான் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். பாரத் ஜோடோ யாத்திரையில் இந்தியாவை பிரிப்போர்தான் ராகுல் காந்தியுடன் நடந்து செல்கின்றனர். பாகிஸ்தானின் ஐஎஸ் உளவு அமைப்புடன் தொடர்புடையோர் ராகுல்காந்தியுடன் நடந்து செல்கின்றனர்.

பரூக் அப்துல்லாவை, ராகுலின் கொள்ளு தாத்தா நேரு தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறை வைத்தார். அவரது பேரன் உமர் அப்துல்லா, நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தியுடன காஷ்மீரில் நடை பயணம் செய்ய உள்ளார். ராகுல் காந்தியின் யாத்திரை கேலியாக, எள்ளி நகையாடும் விதமாக உள்ளது.

கட்சியை விட்டு வெளியில் செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வழக்கம், வெளியேறுவோர் என்னை புகழ வேண்டிய அவசியமில்லை. பெண்கள் நிறைய பேர் பாஜகவில் இன்று இணைகின்றனர்.

காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும். திமுகவை நான் ஆக்ரோசமாக எதிர்த்து வருகிறேன் , பாஜகவில் சிலர் தவறாக திமுகவுடன் தொடர்பில் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஈஷாவில் இருந்த பெண்கள் மரணமடைந்தது குறித்து முத்தரசன் கருத்துகளை தெரிவித்துள்ளார். அங்கு இருந்த பெண்கள் காணாமல் போனது குறித்து தமிழக அரசின் கட்டப்பாட்டில் உள்ள காவல்துறையிடம் முத்தரசன் முறையிடலாம், என்று அண்ணாமலை கூறினர்.

பின்னர், திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் புகார் தெரிவிப்பதாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி (புதிய தலைமுறை ) செய்தியாளர் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் கடுமையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் , பெண் காவலரிடம் தவறாக நடந்தவர்கள் மீது உடனடியாகவ நடவடிக்கை எடுக்காதது குறித்து முதல்வரிடம் ஏன் எந்த செய்தி நிறுவனங்களும் கேள்வி கேட்கவில்லை . கமலாலயத்திற்கு வந்தால் வந்தும் அனைவருக்கும் கேள்வி கேட்கும் துணிச்சல் வந்துவிடுகிறது.

சுப்ரமணிய சாமி உட்பட கட்சிக்கு 30,40 ஆண்டுகளாக உழைத்துள்ளேன் என்று சொல்லி கொள்வோரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களது வீட்டுக்கு சென்று நான் தேநீர் அருந்திக் கொண்டிருக்க முடியாது. நான் நல்லவனா..? சுப்ரமணிய சாமியின் சர்டிபிகேட் எனக்கு அவசியமில்லை.

இங்கு கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரின் மீதும் 2.63 லட்சம் தமிழக அரசின் கடன் இருக்கிறது. ஆதார் இருக்கும்போது புதிதாக மாநில அரசு மக்கள் ஐடியை ஏன் வழங்க வேண்டும். அதனால் என்ன பயன். திமுக கனவில் கூட தமிழ்நாட்டை தனி நாடு ஆக்க வேண்டும் என நினைத்து பார்க்க முடியாது. அதற்கான துணிச்சல் திமுகவிற்கு கிடையாது. யாரிடமோ காசு வாங்கி கொண்டு மக்கள் ஐடிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

கட்சியில் சிலர் என்னை எதிர்ப்பது நல்லதுதான் , வளரும் கட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். பாஜக அடிமைக் கட்சியல்ல.. 10 ல் 2 பேர் என்னை எதிர்க்கத்தான் செய்வார்கள். அதை நான் வரவேற்கிறேன். நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை, எனக் கூறினார்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!