பட்டியலின ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதி மறுப்பு.. இதுதான் உங்க சமூக நீதியா…? திமுகவை வெளுத்து வாங்கும் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 6:02 pm

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், அண்மை சம்பவங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களை சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள். சமீபத்தில் சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தை சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இது தொடர்பாக பா.ஜ., துணைத் தலைவர் சம்பத், கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுதா வரதராஜி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது. தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அதுமட்டுமல்லாது, 22 ஊராட்சிகளில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில், பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு அமர்ந்து கொண்டு உ.பி., பீஹாரில் என்ன நடக்கிறது என விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர் தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!