வேடிக்கை பார்த்ததன் விளைவு தான் இது… இளைஞர்களை அழிக்கும் ஆயுதம் ; திமுக அரசு மீது அண்ணாமலை காட்டம்

Author: Babu Lakshmanan
11 March 2024, 9:27 pm

போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவுதான் தற்போதைய நிலை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர்தான், சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது.

இன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும், 876 கிலோ கஞ்சாவும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் தங்குதடையின்றி இருந்து வந்திருக்கிறது என்பதையே, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு, தற்போது சோதனைகளில் பிடிபடும் போதைப்பொருள்களின் அதிகபட்ச அளவு காட்டுகிறது. போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்போகிறதா?, என தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!