முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கு போனாரா-னு தெரியல… முதல்ல அவரை வரலாற்றை படிக்கச் சொல்லுங்க ; அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 5:09 pm

சென்னை ; சிஏஏ குடியுரிமை கொடுக்கும் சட்டம் தானே தவிர பறிக்கும் சட்டம் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியது. இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, விசிக போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சிஏஏ தொடர்பாக மக்களை குழப்பி திசைதிருப்பும் வேலையை தமிழகத்தில் சில கட்சிகள் செய்கின்றன.
அகதிகளை திருப்பி அனுப்புவது இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கு எதிரானது என்பதை தமிழக கட்சிகள் கூற வேண்டும். இலங்கை அகதிகள் வெளியில் சென்று வேலை செய்ய, படிக்க எந்த தடையும் இல்லை. இலங்கையில் இருந்து வந்த அகதிகள் அனைவருக்கும் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்களில் 14 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வசித்தோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அகதிகளாக வருபவர்கள் இந்தியாவில் தங்கி இருக்கலாம் ; அவர்கள் நாட்டில் பிரச்சனை முடிந்ததும் திருப்பி அனுப்பப்படுவர். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த வரி இஸ்லாமியர்களின் குடியுரிமையை நீக்குவோம் என கூறியுள்ளது?. யாழ்ப்பாணத்தில் சிக்கல்கள் இருந்தாலும் அங்கே தமிழர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
பாகிஸ்தானில் எத்தனை இந்துக்கள் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர்..?.

இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தமாக கூறி வருகின்றோம். தஸ்லிமா நஸ்ரின் போன்ற இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வந்து வசிக்கின்றனர் ; அவர்களை நாகரீகமாகவும், சமமாகவும் நடத்துகிறோம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்த என்ன அதிகாரம் உள்ளது
முதலமைச்சருக்கு எந்தளவு அரசியல் சட்டம் தெரிந்துள்ளது என சந்தேகமாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறாரா..? என்று தெரியவில்லை ; வரலாறு புத்தகத்தை அவர் நன்றாக படிக்க வேண்டும்.

யாரை விமர்சிக்க வேண்டுமோ, அவர்களை மட்டும் தான் விமர்சிப்போம். அதிமுகவுக்கு பதில் சொன்னால், விசிக, கம்யூனிஸ்ட் போன்றவர்களுக்கும் பதில் சொல்லும் நிலை ஏற்படும், எனக் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ