ஊழல், குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்… தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றிய திமுக ; அண்ணாமலை
Author: Babu Lakshmanan20 February 2024, 10:56 am
மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி வைத்துள்ளது தி.மு.க என்று பாமக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்துக்காக, இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக, தமிழக மக்கள் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 17 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. வரவிருப்பது 18வது தேர்தல். முதன்முறையாக நமது பிரதமர் மோடி அவர்கள்தான் மீண்டும் பிரதமராகப் போகிறார் என்ற தேர்தல் முடிவு உறுதியாகத் தெரிந்து நடக்கும் தேர்தல் இதுதான். மற்ற கட்சிகள் ஜாதி அரசியல் செய்யும்போது, நமது பிரதமர் ஆட்சி, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கான, சாமானிய மனிதர்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் மீது மட்டுமல்ல, அவரது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நேர்மையான நல்லாட்சி நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆட்சி, குறுகிய கண்ணோட்டத்தில் நடந்தது. தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்வது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி நாட்டின் உட்கட்டமைப்புக்குச் செலவு செய்தது 2 லட்சம் கோடி. பாஜக இந்த ஆண்டு உட்கட்டமைப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ள நிதி 11 லட்சம் கோடி. வேகமான வளர்ச்சியை நோக்கி நமது நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதே நேரம், தமிழகத்தில், ஜனநாயகம் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி எல்லாம்தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக, அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசாங்கம், கடந்த 33 மாதங்களாக கதை திரைக்கதை வசனமாக நடக்கிறதே தவிர, மக்களுக்கான அரசியலாக இல்லை. முதல்-அமைச்சர் ஸ்டாலின், மூன்று முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டும் ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. உத்திரப் பிரதேச மாநிலம் 33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழக அரசு 6.60 லட்சம் கோடி முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது என்று கூறுகிறது. அதிலும் முதலீடு நமக்கு வந்து சேரவில்லை. மூன்று ஆண்டுகளில், தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி வைத்துள்ளது தி.மு.க..
கடன்கார மாநிலமாக இருக்கும் தமிழகத்தை வளர்ச்சி மாநிலமாக மாற்ற வேண்டும். சென்னையை புதிய கட்டமைப்புடன் மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். ஊழல், குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவற்றைச் செய்ய பாஜகவால் மட்டும்தான் முடியும். அதற்கு முதல் படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், மோடி என்ற ஒற்றை மனிதரை நம்பி தமிழகம் வாக்களிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் லட்சியத்துடன் ஓய்வின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது பிரதமர் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். என தெரிவித்துள்ளார்.