அடுத்து சிக்கப் போவது இந்த அமைச்சர் தான்… இவர் குட்டி செந்தில் பாலாஜி ; மறைமுகமாக சொல்லும் அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan15 June 2023, 12:02 pm
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, திமுகவில் இருந்து விலகி, 6வதாக வேறு கட்சியில் இணையவும் வாய்ப்பிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரியலூர் – ஜெயங்கொண்டத்தில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- 1947லிருந்து தமிழகம் மற்றும் இந்தியாவில் பல்வேறு கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. அதில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை உலக நாடுகளே பாராட்டுகிறது.
2014-ல் 11வது பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது 5வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இதற்கு பாரத பிரதமர் மோடியே காரணம். 220 கோடி கொரோனா தடுப்பூசி திட்டம் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா சாதனை பெற்றுள்ளது. முன்னொரு காலத்தில் விஐபி கையெழுத்து இருந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும். 36 கோடி எல்இடி மின்விளக்கை மத்திய அரசு கொடுத்துள்ளது.
அனைத்து திட்டங்களையும் மக்கள் அறியும் வகையில் செல்போனில் அந்த வசதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்தாண்டில் 12,735 கோடி முறை டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. டீக்கடையில் கூட செல்போன் மூலம் பணபரிவர்த்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் பெற குறிப்பிட் தொகையை இடை தரகர்களுக்கு தரும் நிலை தற்போது முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகாலத்தில் தமிழகத்தில் 9 லட்சம் பேருக்கு பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 9 கோடி பேருக்கு இலவச காஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் காஸ் விலை குறைக்கப்படும்.
முத்ரா கடன் திட்டம் வந்த பிறகு அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.1,512 கோடி கடன் வழங்கப்பட்டு, பலரும் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. கடன் வாங்குவது கூட தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. 1.54 லட்சம் பேர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, மத்தியில் இருந்த காங்கிரஸிடம் எத்தனை அமைச்சர் சீட்டு வழங்கப்படும் என கேட்டவர் கருணாநிதி.
உலகம் முழுவதும் தமிழ் மொழியினை மோடி கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் காலில் விழுந்து கொண்டிருந்தோம். ஆனால், தற்போது மாறிவிட்டது.
உலகம் முழுவதும் இந்தியாவை மரியாதையுடன் பார்க்கிறது. திருக்குறளை உலகம் முழுவதும் மக்கள் படிக்க வேண்டும் என 23 மொழிகளில் மாற்றி பல்வேறு நாடுகளுக்கு கொடுத்துள்ளார். அந்த பிரதமரை பார்த்து தமிழ் விரோதி என கூறுகின்றனர்.
மண்ணின் கலாச்சாரம் தெரிவதால் தமிழ் மொழியை பிரதமர் தூக்கி நிறுத்துகிறார்.
சோழசாம்ராஜ்யத்தினை அறிந்த பிரதமர் செங்கோலை கொண்டுவரச் செய்து, புதிய மக்களவை கட்டிடத்தில் சபா நாயகர் அருகே செங்கோலை வைத்து அழகு பார்க்கிறார். தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்ற வார்த்தை உள்ளது. ஆனால், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்ற வார்த்தை இல்லை. இதுகுறித்து புரிதல் இல்லாமல் எம்பி தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசுகிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது தான் அவர்களது சாதனை. இவற்றை மாற்ற சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் போட்டியிட்டு வெல்வார். 2024ல் 400 எம்பிக்களை வெற்றிப்பெறச் செய்து மோடி ஆட்சியமைப்பார்.
நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவன் முதலிடமும், 4 பேர் முதல் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அரசியல் செய்து, செய்து நீட் என்பதை பெரிய பூதமாக மாற்றிவிட்டனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் மருத்துவ படிப்புகளுக்கு தற்போது செல்கின்றனர்.
தமிழகத்தில் அமலாகத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, நடத்துநர், மெக்கானிக் வேலைகளுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு பணி வழங்கினார். அப்போது, அவர்மீது புகார் அளிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு யார் புகார் அளித்தவர்களோ, புகார்களை திரும்ப பெறுகின்றனர்.
ஆனால்,செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டதால், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மூலம் ஒரு வருடத்துக்கு ரூ.44 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகிறது.
இன்று செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், நெஞ்சுவலி என மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நள்ளிரவில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்று அவரை பார்ப்பதற்கான காரணம் என்ன..? அடிச்சு கேட்டாலும் என் பெயரை சொல்லி விடாதே எனச் சொல்லுவதற்காகத் தான். அதேபோல, அமைச்சர் உதயநிதி, முதலமைச்சரின் மருமகன் சபரீசன் ஆகியோரும் செந்தில் பாலாஜியை சந்திக்க இது தான் காரணம்.
அதுமட்டுமில்லாமல் 21 அமைச்சர்கள் உடனுள்ளனர். அவர்கள் அங்கு இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவர் இதுவரை 5 கட்சி மாறியவர். 6வது கட்சிக்கு மாறவும் தயாராக இருப்பார். திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் ஆன்லைன் பண பரிவர்த்தனை கொண்டுவரப்பட்டது. ஏனெனில் அனைத்தையும் அவர்கள் திருடி விடுவார்கள் என்றுதான்.
செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த இடத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளார். அவர் 36 பணிமாறுதலுக்கு ரூ.12 கோடி கமிஷனாக பணம் பெற்றுள்ளார். அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும், என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியலணித் தலைவர் பெரியசாமி, அரியலூர் மாவட்டத்தலைவர் அய்யப்பன் உட்பட அனைத்து பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.