பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக… 1963ல் நடந்ததை மீண்டும் நினைத்து கூட பார்க்க முடியாது ; ஆ.ராசாவுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 12:46 pm

பிரிவினைவாதம் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, தமிழகத்தில் இனி திமுக என்ற கட்சியே இருக்காது என்று பிரதமர் மோடி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

அவர் பேசுகையில், “ஒரு மொழியை மட்டுமே பேசும் மக்களை கொண்டது தான் இந்தியா. ஆனால், இந்தியா நாடு அல்ல, துணைக் கண்டம். தமிழை மட்டுமே பேசும் தமிழ்நாடு ஒரு தேசம். மலையாளத்தை பேசும் கேரளா ஒரு தேசம். ஒடியாவை பேசும் ஒடிசா ஒரு தேசம்.

தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காதா..? அப்போ, இந்தியாவும் இருக்காது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை ஒழித்து விடுவீர்கள். அதை ஒழித்தால் இந்தியாவும் ஒழிந்து விடும்,” எனக் கூறினார்.

திமுக எம்பி ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த அவர், மக்கள் மனதில் பிரிவினைவாதம் என்னும் விஷமத்தை விதைப்பது திமுகவின் அடித்தள அரசியல். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்த திமுக எம்பி விரும்புகிறார்.

1963ல் புதைக்கப்பட்ட திமுகவின் பிரசாரம் ஒருபோதும் தலைதூக்க முடியாது. இண்டியா கூட்டணியை வன்மையாகக் கண்டிக்கிறோம். நமது நாட்டை உடைக்க மற்றும் வெளிநாட்டு ஏஜெண்டுகளின் கைப்பாவையாக இண்டியா கூட்டணி செயல்படுகிறது,” என்றார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…