கனிமொழிக்கு பொறாமை…. உதயநிதியுடன் போட்டி போட்டுக் கொண்டு நாடகம் ; அண்ணாமலை விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 4:31 pm

உதயநிதி ஸ்டாலின் பிரபலமடைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கனிமொழி நடத்திய நாடகமே மகளிர் உரிமை மாநாடு என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடிய வகையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இரண்டு கட்ட பாதையாத்திரை நிறைவடைந்த சிறிது நாள் இடைவெளிக்கு பின்பு, இன்று மூன்றாம் கட்ட பாதயாத்திரை திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் துவங்கியது.

சேவூர் சாலையில் துவங்கிய இந்த பாதயாத்திரை பயணத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். சேவூர் சாலை , கிழக்கு ரத வீதி , வடக்கு ரத வீதி ஆகியவற்றின் வழியாக சுமார் நான்கு கிலோமீட்டர் மத்திய அமைச்சர்களோடு நடைபயணம் மேற்கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை, அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் எல்முருகன் பேசியதாவது :- தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை. சென்னிமலையில் கூடிய கூட்டமே அதற்கு உதாரணம், என பேசினார்.

தொடர்ந்து பேசிய மத்திய ஜவுளி மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது :- தமிழகத்தில் முக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஊழல் இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் காரணமாக ஊழல் பெருக்கெடுத்து வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழல் இல்லாத அரசை நடத்தி வருவதோடு, அதை தொடர விரும்புகின்றனர்.

தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல மத்தியில் பிரதமர் மோடி போல, தமிழகத்தில் இளைஞர் அண்ணாமலை அதற்காக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை அண்ணாமலை தலைமையிலான பாஜகவினரால் கொண்டுவர முடியும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் குழாய் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி பயணித்துக் கொண்டிருக்கிறார், எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னையில் திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பெண் தலைவர்களை அழைத்து வந்து மகளிர் உரிமை மாநாடு என நடத்தி இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்தார்.

ஆனால் 2010 ஆம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மகளிர்க்கு கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி அதனை லோக்சபாவிற்கு கொண்டு செல்லாமலேயே அதனை மறக்கடிக்க செய்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு தற்போது அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், பிரதமர் மோடி 33 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் தலைமுறை பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகின்றனர். குடும்ப அரசியலை நடத்தி வரத்திற்குரிய கனிமொழி பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்காக அல்ல.

மேலும், இந்த மாநாடு நடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம், சனாதனம் குறித்து பேசி இந்தியா முழுவதும் எதிர்வினையாக பிரபலமடைந்த உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை கண்டு தானும் பிரபலமடைய வேண்டும் என கனிமொழியால் நடத்தப்பட்ட ஒரு மாநாடு. மேலும், தமிழகத்தில் நம்பர் ஒன் திருடன் என்றால் அதனை இந்து அறநிலையத்துறை என்று தான் குறிப்பிட வேண்டும்.

பிரதமர் மோடி பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுடன் போராடி 361 இந்திய மற்றும் தமிழக சிலைகளை மீட்டு வந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து மத்தியில் ஆட்சி அமைத்த திமுக எத்தனை களவு போன சிலைகளை மீட்டு வந்துள்ளது? இதன் மூலமாகவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைத்தான் தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். மிஸ்டர் ஸ்டாலின் அதை பொய் எனக் கூறுகிறார். ஆனால் மிஸ்டர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்.பிரதமர் மோடி பேசியது உண்மை.

தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிலங்கள் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாஜகவிற்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்கள் என நம்புகின்றனர், எனக் கூறினார். அவிநாசி நகர பாஜக சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருக்கு செங்கோல் பரிசளிக்கப்பட்டது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 308

    0

    0