திமுக இளைஞரணி மாநாட்டை நடத்துவதே உதயநிதிக்காகத் தான்… துணை முதலமைச்சராக அறிவிக்க திட்டம் ; அண்ணாமலை
Author: Babu Lakshmanan12 January 2024, 12:34 pm
சேலம் இளைஞரணி மாநாடு போடாதே என்று இயற்கை இதுவரை 4 முறை தள்ளி வைத்திருப்பதாகவும், உதயநிதி துணை முதல்வராக்க நினைக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, தளி தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்கிற யாத்திரையை முடித்துக்கொண்டு மாவட்டத்தின் கடைசி மற்றும் 150வது தொகுதியாக ஒசூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தினார். 150வது தொகுதி என்பதால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி பங்கேற்றார்.
ஓசூரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த வாகனத்தில் ரவி, அண்ணாமலை ஆகியோர் வருகை தந்தனர். பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :- சேலத்தில் மாநாட்டை போடாதே என இதுவரை இயற்கை 4 முறை தள்ளிப்போட்டிருக்கிறது. இது இயற்கை கொடுக்கும் செய்தி. திமுகவை பொறுத்தவரை ஒரு நிமிடத்தில் முடிவு, இரண்டு நிமிடத்தில் அறிவிப்பு, மூன்றாவது நிமிடத்தில் தொண்டர்கள் ஏற்பார்கள். இதுதான் குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி.
திருச்சியில் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டுமென திமுகவினர் எதிர்பார்த்திருக்கிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு வயதானவர்கள் கட்சியில் எதற்கு என உதயநிதியை முதல்வராக்க ஒரு கூட்டம் சுத்திக்கொண்டிருக்கிறது, என விமர்சித்தார்.