காவிரி நீர் விவகாரம்.. இதுவரையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்..? திமுக – காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி ; அண்ணாமலை விளாசல்…!!

Author: Babu Lakshmanan
4 August 2023, 8:33 am

சிவகங்கை ; ரேஷன் கடைகளில் கருப்பட்டி, தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்த திமுக, இதுவரை அதனை கொடுத்தார்களா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- இன்றைய என் மண் என் மக்கள் பயணத்திற்கு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பெரும் திரளென பொதுமக்கள் கூடி ஆதரவளித்ததில் பெரும் மகிழ்ச்சி.

பெருமை வாய்ந்த பிள்ளையார்பட்டி கோவில் இருக்கும் பகுதி திருப்பத்தூர். வீரத்தின் மறு உருவமாக விளங்கிய மருது சகோதரர்கள் உயிர்த் தியாகம் செய்த ஊர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கம்புணரி பொறி மற்றும் தென்னை நார் கயிறு புகழ்பெற்றவை. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால ஆட்சியில், தென்னை நார் பொருள் தொடர்பான தொழில்கள் பெரும் வளர்ச்சியடைந்துள்ளன.

மோடியின் முகவரி: திருப்பத்தூர்

தமிழகத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த அடல் ஓய்வூதியத் திட்டத்தின் 38 லட்சம் பயனாளிகளில் திருப்பத்தூரைச் சேர்ந்த செல்வி அடைக்கம்மை, மகளிர் சுய உதவிக் குழு மூலம் பயனடைந்த திருப்பத்தூர் மல்லிகை மகளிர் சுய உதவிக் குழு, 15 லட்சம் பேர் பலனடைந்த பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திருப்பத்தூர் திரு சுப்பையா, தேசிய ஊட்டச்சத்து திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2907 கோடி நிதியில் பலனடைந்த திருப்பத்தூர் நெற்குப்பை பகுதி திருமதி போதுமணி அவர்கள் ; இவர்கள் தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி

தமிழகத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சர் திமுகவின் பெரிய கருப்பன், கடந்த 27 மாதங்களாக அமைச்சராக இருந்து, இந்தப் பகுதிக்கு இவர் செய்த பணிகள் என்ன? நியாய விலைக் கடைகளில் கருப்பட்டி, தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொடுப்போம் என்றார்கள். இதுவரை கொடுக்கவில்லை.

பறவைகள் ஆய்வு மையம், வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயம், திருப்பத்தூர் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் என வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, நீண்ட கால பிரச்சினையை சரி செய்தார். கர்நாடகாவில் திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், தண்ணீரை நிறுத்தி விட்டார்கள். ஜூலை மாதம் தமிழகம் பெற வேண்டிய 31 டிஎம்சி நீர் வழங்கப்படவில்லை. முதலமைச்சர் முக ஸ்டாலினோ, காங்கிரஸின் சிதம்பரமோ அல்லது கார்த்திக் சிதம்பரமோ காவிரி நீர் குறித்து இப்போது பேசினார்களா?

வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வியடையச் செய்வோம். தமிழ் மக்களின் மீது மிகுந்த அன்பு கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களை மீண்டு வெற்றி பெறச் செய்வோம். தமிழகத்தின் பெருமையை, தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்போம், என தெரிவித்துள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 447

    0

    0